×

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளி பயணம் ரத்து.. கடைசி நேரத்தில் நடந்தது என்ன ?

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் திடீரென நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 58 வயதான சுனிதா வில்லியம்ஸ் 3-வது முறையாக இன்று விண்வெளிக்கு செல்ல இருந்தார். அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் கடந்த 2006 மற்றும் 2012ம் ஆண்டுகளில் 2 முறை நாசா சார்பில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டு பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். தற்போது 58 வயதாகும் சுனிதா வில்லியம்ஸ் 3வது முறையாக மீண்டும் விண்வெளிக்கு செல்ல இருந்தார். இம்முறை அவர் தனியார் நிறுவனமான போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தின் விமானியாக விண்வெளிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். அவருடன் புட்ச் வில்மோரும் விண்கலத்தில் பயணிக்க இருந்தார்.

புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரலில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஸ்டார்லைனர் விண்கலம் இந்திய நேரப்படி இன்று காலை 8.04 மணிக்கு புறப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாகத் திட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. ராக்கெட் ஏவப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு, அட்லஸ் V ராக்கெட்டின் லான்ச் நிறுத்தப்பட்டது. ராக்கெட்டில் ஆக்ஸிஜன் ரிலீஃப் வால்வில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக இந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்டார்லைனர் விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் நாசாவின் பேரி வில்மோர் ஆகியோர் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.

இந்த பயணம் அடுத்த முறை வெற்றி அடையும் பட்சத்தில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு பிறகு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வீரர்களை அனுப்பி வைக்கும் 2வது தனியார் நிறுவனமாக போயிங் மாறும். இதுவரை ஸ்பேஸ்எக்ஸின் க்ரூ டிராகன் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு வரும் நிலையில், ஸ்டார்லைனர் முதல் முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று சோதிக்கப்பட உள்ளது.

The post இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளி பயணம் ரத்து.. கடைசி நேரத்தில் நடந்தது என்ன ? appeared first on Dinakaran.

Tags : Sunitha Williams' ,Washington ,Sunitha Williams ,Sunita Williams ,America ,
× RELATED 58 வயதில் 3வது முறையாக சுனிதா...